Saturday, 1 October 2011

ஹலோ... நான் அம்மா பேசறேன்!

சிறு கதை    



அன்று


நான்தாங்க கமலா.  ராதாவோட அம்மா. வயசு 75 .

காத்தாலேருந்து எனக்கு ஒரே தவிப்பா இருக்கு. ராதா ஏன் இப்படி போனையே எடுக்க மாட்டேங்கறா? ஒரு நாளப் போல தினமும் அப்படி என்ன வேலை? என்ன பிஸி?  பொடலங்கா 
பிஸி?  அம்மா கிட்ட ரெண்டு வார்த்தை பேசக்கூட நேரமில்லாம?

அட! என்ன ஆச்சர்யம்?  போனை எடுத்துட்டாளே!


‘ஹலோ.. ராதாவா?  நான் தான் பேசறேன்.. இதோ பாரு முக்கியமா ஒரு விஷயம் பேசணும்னு போன் பண்ணினேன். அப்பறம் பேசறேன்னு போனை வச்சுடாதடீ ராதா ப்ளீஸ்’.   


“சரிம்மா. சொல்லு. சட்டுனு முடி”.

‘கழுத்துல லேசா வீங்கியிருக்குன்னு சொன்னியே?  உடனே டாக்டரைப் போய்ப் பாரு’.

“ம்.....பாக்கறேன்

‘மத்த எல்லா விஷயம் மாதிரி இதையும் தள்ளிப்போடாதே. நீ எதையுமே கவனிக்காம எப்ப பாத்தாலும் வேலை, புருஷன், குழந்தைன்னு ஒரே ஓட்டமும் டென்ஷனுமா  இருக்கே. உன் ஒடம்பைப் பத்தி தான் எனக்கு கவலை.’

“இப்ப எனக்கு வர்ஷாவை ட்யூஷன்லேருந்து கூட்டிட்டு வர கவலை

‘கழுத்துல வலி ஏதாவது இருக்கா?

பாத்தியா? முக்கியமா ஏதோன்னு பாத்தா நீட்டி முழக்கி சொன்னதையே சொல்லிட்டு இருக்க?  நான் பாத்துக்கறேம்மா. இப்ப நீ வை போனை. மத்தியானமா நிதானமா பேசறேன். என்ன?

‘ம்..தெரியும். போதும் போதும். இது வரைக்கும் எத்தனை மத்தியானம் போயாச்சு?  எத்தனை தடவை எனக்கு போன் பண்ணி நிதானமா பேசியிருக்கே?!’

“அய்யோ.. அம்மா டாட்டா பை பை. வச்சுடறேம்மா. கண்டிப்பா அப்பறம் போன் பண்றேம்மா. ஐ லவ் யூ....

பட்டென போன் மறுமுனையில் கட் .

ஆமாமா சீச்சீ?  யாருக்கு வேணும் இந்த ஐ லவ் யூ கண்றாவியெல்லாம்? பத்து நிமிஷம் பேசினா கொறஞ்சா போயிடுவா? ரொம்பத்தான் பண்ணிக்கறா?  என் புலம்பல்,  என் கோவம் இதெல்லாம் இவளுக்கு எங்க புரியப் போகுது?

இந்த மாதிரி எத்தனை தடவை பெத்த பொண்ணுகிட்ட,  என் செல்ல மகள் கிட்ட பேசணும்னு நான் துடிச்சிருக்கேன் தெரியுமா?  பல நாள் ராத்திரில ஏதாவது மனக்குழப்பம் இருந்தா தூக்கமே வராது.  நானும் விடாம போன் பண்ணுவேன்.  ஆனா ஒரு நிமிஷத்துக்கு மேல அவ பேச மாட்டா.  அவ வீடு 10 கிலோமீட்டர் தூரத்துல தான் இருக்கு.  இருந்தாலும் என் ஒடம்பை வச்சுக்கிட்டு அடிக்கடி அங்க என்னால போக முடியல.  எனக்கும் பொறுப்புகள் இருக்கே!.  அவ வரதும் முடியாது.  அவ பிசியைப் பத்திதான் உங்களுக்கு தெரியும்.  பாவம் அவ.

சரி.  கெடக்கட்டும், போகுது போங்க.  சின்னப்பொண்ணுதானே?  அவ எங்க போகப் போறா ?  இல்ல நான்தான் எங்கப் போகப் போறேன்?  ஒரு நாள் இல்லாட்டி இன்னொரு நாள் நிறையப் பேசுவான்னு நெனச்சேன்.


அப்படி நெனச்ச கொஞ்ச நாளுக்குள்ள, எனக்கு திடீர்னு ஒடம்பு மோசமாப்போய் ஒரு மாசம் நான் படுத்த படுக்கையாயிட்டேன்.  சும்மா சொல்லக்கூடாது.  என்னைச் சுத்தி இருந்தவங்களை ஒரு ஆட்டு ஆட்டி வச்சுட்டேன்.   ஆனா டாக்டர், ஆஸ்பத்திரி, ஊசின்னு வலிகள் ஆயிரம் இருந்தாலும், ஆஹா!! எதைன்னு சொல்வேன்?  என் மக ராதா என்னை அடிக்கடி வந்து பாத்ததை சொல்றதா?  இல்ல ஜூஸ், கஞ்சி, இட்லின்னு மாத்தி மாத்தி கொண்டு வந்து கொடுத்ததை சொல்றதா? இல்ல என் ஒடம்பை தொடச்சு விட்டதை சொல்றதா?

முக்கியமா ராதாவோட பிஸிக்கு நடுவுல கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் படுக்கையிலேயே நிகழும் என் பாத்ரூம் இத்யாதி வேலைகளை கவனிப்பா பாருங்க.  எந்த நர்ஸும் ஈடாகாதுங்க. பாவம் அவ. 

தினம் நிதானமா என்கூட மணிக்கணக்கா பேசினா.  அப்பா! எத்தனை வருஷம் ஆச்சு இப்படிப் பேசி? எத்தனை மாசமாச்சு இப்படி மகளின் அருகாமையை அனுபவித்து?   ‘அம்மா சட்டுனு போனை பேசி முடின்னு அவ எப்போதும் சொல்றது ஞாபகம் வரும்.  உடனே நான் தான் அவ வேலைகளைப் பத்தி ஞாபகப் படுத்தி அவளை அனுப்புவேன்.

என் பொண்ணு தினமும் வரா,  என் கூடப் பேசறான்னு நெனச்சு படுக்கையிலேயே நான் கெடக்க முடியுமா?  நல்லா இருக்கே நீங்க சொல்றது?! என் குழந்தை கஷ்டப் படறது எனக்கு தாங்கல.

பொழுது விடிஞ்சது. அன்னிக்கு நல்ல நாளா இருந்தது.

ராதா என் பக்கத்துல வந்து,  எப்போதும் போல எனக்கு பிடிச்ச அனுராதா ஸ்ரீராம் பாட்டை டேப்பில் போட்டு என்னை கேக்க வச்சா! நான் வலியில் அழுவதைப் பார்த்து அவளும் துடிச்சா.  ஒரே ஒரு முக்ய வேலை இருக்கு. திரும்ப மதியம் வரேம்மான்னு சொல்லிட்டு ராதா வீட்டுக்கு போயிட்டா.  அடுத்த சில மணி நேரங்கள் என்ன நடந்ததுன்னே எனக்கு தெரியாது.

அதான் சொன்னேனே, அன்னிக்கு நாள் ரொம்ப நல்லா இருந்ததுன்னு.  ராதா அடிக்கடி சொல்றாப்பல, ‘சட்டுனு முடிச்சுக்கிட்டேங்க நான் அந்த நொடில. அதாங்க என்னோட இந்த உலக வாழ்க்கையை சொல்றேன்.


இன்று

நான் லேட் (late) கமலாங்க இப்போ.

ஆனா பாருங்க.  என்னால பாக்க சகிக்காத ஒரு காட்சிங்க.

அதோ...

போன் கிட்டயே என் பொண்ணு ராதா உட்கார்ந்துகிட்டு இருக்கா.  நான் போன் பண்ணுவேன்னு வெயிட் பண்றாங்க.  போன் பேச எப்படிதான் நிறைய நேரம் கெடச்சதோ தெரியல.   அசடு!. அசடு!. என்னால எப்படி அவளுக்கு போன் பண்ண முடியும்?

அவ போன் நம்பர் அப்பவே மாறிப்போச்சே!  புது நம்பர் எனக்கு தெரியலயே!

யாராவது ப்ளீஸ்... ராதாவோட நம்பர் தெரிஞ்சா எனக்கு சொல்றீங்களா?  ராதாவை பாத்தா பாவமா இருக்குங்க. சத்யமா வளவளன்னு பேசமாட்டேன். சட்டுனு ரெண்டே வார்த்தைல பேசி முடிச்சுடறேங்க.

இல்லாட்டி நீங்களாச்சும் அவ கிட்ட சொல்றீங்களா? எப்போதும் ஐ லவ்யூனு உங்கம்மா கமலா சொல்லி விட்டாங்கன்னு கொஞ்சம் ராதா கிட்ட சொல்றீங்களா? ப்ளீஸ்?...

முற்றும்    
Geetha
Published: சூரிய கதிர், அக்டோபர் 1-15, 2011, பக்கம் 52,53

15 comments:

  1. Romba Touching story daa. Facts of life.

    Charu

    ReplyDelete
  2. Very touching story

    -Aarthi

    ReplyDelete
  3. Very touching... My eyes are still moist

    ReplyDelete
  4. I like the style . Nice.

    ReplyDelete
  5. ORU OORIL IRUPPAVARGAL PALARUM ANDHA OOR KOILUKKU SELVADHU ILLAI, WAYRU OORIL ULLA KOVILUKKU THAAN SELVAARGAL ADHU MANIDHA IYALBHU.IRUKKUM IDATHAI VITTU ILLADHA IDATHIL THEYDUVADHU POL DHAAN IDHU ULLADHU. PALARUKKUM ARUGIL IRUPPAVARGALIN ARUMAI AVAR IRUKKUM VARAI THEYRIVADHILLAI AVAR PONA PIRAGHUDHAAN PURIGIRADHU.VINDHAYAANA MANIDAPPIRAVI.
    S.S.GANESH

    ReplyDelete
  6. Very good story Geetha and reality of life, we appreciate anything only after we loose them. Unfortunately our pursuit of materialism keeps us from paying attention to what is really important in life. But all the material things we accumulate over our life time does not bring the happiness we expected and we end our life full of regrets! - Hema

    ReplyDelete
  7. என் அம்மாவேடு எனது இறுதி நாட்களை கண்முன் நிறுத்தியது கதை. கதை நடையும் வெளிகொண்டுவரும் எதாற்தமும் அருமை. வாழ்த்துக்கள்
    - காரை மைந்தன் (Sebastian)

    ReplyDelete
  8. Excellent Narration Style. You have a skill. Write more and take this to magazines.

    ReplyDelete
  9. Wish you a great career as a Writer and Story teller.

    ReplyDelete