Saturday, 1 October 2011

ஒரு வா காபி



சிறு கதை

காத்தாலேருந்து லேசா இருந்த தலைவலி ஜாஸ்தியாயிடுச்சு இப்ப. அம்மா காபி சூடா குடிச்சா தேவலை. குடிச்சா தலைவலி பட்னு விட்டுடுமா?

எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னால் அடிக்கடி அம்மா காபி தருவாள். அதுவும் பரிட்சைக்கு படிக்கும் போது ராத்திரி 2 மணிக்கும் 3 மணிக்கும் டாண் டாண்னு அலாரம் வச்ச மாதிரி எழுந்து கலந்து தருவாள். என்ன ஒண்ணு....அரை மணியில் தூக்கம் வந்துவிடும்....காபி அப்படி மயக்கும்...!


தூங்கி எழுந்துக்கறதே, காத்தால எழுந்து பல்தேச்சதும் அம்மா கலந்து குடுக்கப்போற அந்த காபிக்காகதானோன்னு தோணும்.


வீட்டுக்கு யார் வந்தாலும். அவர்களுக்கு காபி உபசாரம் நடக்கும். என் ஃப்ரெண்ட்ஸ்,  அப்புறம் உறவினர்கள்,  அப்பா ஆபீஸ் சகாக்கள் இப்படி எல்லாரும். சில சமயம் டிகாக்ஷன் இருக்காது. யாராவது திடீர்னு வந்துடுவாங்க. ஒரே நிமிஷந்தான். அம்மா மணக்க மணக்க ஃபில்டர் காபி ரெடி பண்ணி விடுவாள்.

அப்பா,   அம்மா போடற காபி நல்லாருக்குன்னா,   அவர் ஒரு நாலு தடவை குடிக்கட்டும். இல்ல ஆபீஸ் ஆசாமிகளுக்கு மட்டும் கொடுக்கட்டும். அதோட நிறுத்தாம கமலா...ராமுவுக்கு கொஞ்சம் காபி போடேன். எல்லாம் ரெடி. இதோ டியூப் லைட்டும் மாட்டிட்டா வேலை முடிஞ்சதுராமு யாரு? என் அண்ணனா? இல்லை.எங்க வீட்டுக்கு ட்யூப் லைட் மாட்ட வந்த எலெக்ட்ரீஷியன். அவனுக்கும் சுடச்சுட அம்மா கை காபி கொடுக்கணும். அவன் உயரமான ஸ்டூல்ல நின்னு அண்ணாந்து பாத்து லைட்டை மாட்டும்போதே “இந்தாப்பா காபியை குடிச்சுட்டு மாட்டு. சூடு ஆறிடும்“னு அவனை அந்த பத்து நிமிஷ வேலையையும் ஒழுங்கா செய்ய விடாம உபசாரம்.

அன்னிக்கு இப்படிதான் கமலா...ஒரு வா காபி கலயேன். சிங்காரம் வந்துருக்கான் பாரு“ .

சூடா காபி கொடுத்தா அம்மா. பெரிய டம்ப்ளரில் தான். அதுவும் ஸ்டிராங்  டிகாக்ஷன். சிங்காரம் காபி சாப்பிட்டாச்சு. அம்மா  நீங்க காபி கொடுத்தா அது தனி ருசிதாம்மா. அம்மாவுக்கு அதுக்குன்னு இந்த புகழ்ச்சியெல்லாம் பிடிக்காதுன்னு நெனச்சுக்க வேண்டாம். அப்படி சந்தோஷப் பட்டுப்பா.

பெருமையை மனசுக்குள்ள அமுக்கி வெச்சுட்டு ரொம்ப அடக்கமா “அதுக்கென்ன சிங்காரம்! காபி போடறது ஒரு பிரமாதமும் இல்ல. எங்க வீட்டுல ஒரு குழாய் ரிப்பேர்,  இல்ல அடைப்புன்னா,  கூப்ட குரலுக்கு உன்ன மாதிரி வேற யாருப்பா ஓடி வருவா?   அதனால பேஷா வா! இல்ல சும்மாவே வா. எப்ப வந்தாலும் ஒருவா காபி உனக்கு தருவேன்

ஒருவா காபி.....ப்ளம்பருக்கு இன்னிக்கு...நேத்திக்கு எலெக்ட்ரீஷியனுக்கு!

நாளைக்கு வாட்ச்மேனுக்கு... நாளன்னிக்கு போஸ்ட்மேனுக்கு... அப்புறம் பக்கத்து வீடு.. எதிர் வீடு இருக்கவே இருக்கே... அபார்ட்மெண்ட்டுன்னா நாலு பேரு வருவாங்க போவாங்கதானே. நான் சத்தியமா பேச்சுக்கு சொல்லல இதை. உண்மையாவே எங்க வீட்டுல இப்படிதான்!.

அன்னிக்கு புதுசா காபி பொடி,  புது பால்,  லீவு நாள், ஞாயிற்றுக்கிழமை. யாருக்கு ‘முதல் காபி’ யோகம் அடிச்சது தெரியுமா?  மாசமொருமுறை மட்டுமே டாய்லெட் க்ளீன் பண்ண வரும் வீரய்யனுக்கு..

ஒரு வா காபி ........

அப்பா கிட்ட சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு. ஏம்பா கூலிதான் கொடுக்கறோமே?  இப்படி உபசாரம் பண்ணினீங்கன்னா சரியா வராதுப்பா..

"போகட்டும் பாவம்...அவங்கெல்லாம் நாம கூப்பிடறபோது ஓடிவந்து வேலை செஞ்சு தறாங்களே?”   இது அப்பா....அம்மா சொல்றாப்பலயே. 


அப்ப ம்மா மட்டும் பாவம் இல்லையா?    

ஒரு வா காபி கலந்து கொடுக்கறதுல எனக்கென்னடி கஷ்டம்”?  இது அம்மா... அப்பா கூட சேர்ந்து போடற ஜால்ரா. 

இவங்களை திருத்த முடியாது. விட்டுட்டேன். குடிச்சுட்டு போகட்டும்.

ஒரு வா காபி.....

நான் கல்யாணம் ஆகிப்போன பிறகு தான் எங்க வீட்டுல பண்ற அபத்தம் இன்னும் நல்லா புரிஞ்சது.

என் மாமியார் வீட்லெல்லாம்,  வீட்டு மனுஷங்களுக்கே கண்டிப்பா ஒரு நாளைக்கு ரெண்டு வேளை காபி தான். நெனச்சபடியெல்லாம் காபி போட முடியாது. மிஞ்சிப்போனா வேலைக்காரிக்கு ஒரு வேளை காபி ( தண்ணி டிகாக்ஷனில் ) . மத்த படி உறவினர் வந்தா உண்டு. அதுவும் சிலருக்கு முதல் டிகாக்ஷனில்,  சிலருக்கு இரண்டாவது. 

ப்ளம்பர் வாட்ச்மேனெல்லாம் வெளில அவங்களேதான் டீ, காபிலாம் பாத்துக்கணும். வீட்டுக்குள்ள வேலை முடிஞ்சுதுன்னா உடனே கெளம்பிடணும்...

அம்மாவீட்டு காபி கதை ஒரு நெடுங்கதை. கல்யாணம் ஆகி 18 வருஷம் ஆச்சு எனக்கு. எத்தனையோ தடவை அம்மாவ பாக்க போவேன்,  வருவேன்.  ஒரு மணியில் 2 காபியாவது குடுக்காம விடமாட்டா. எப்ப போனாலும் மொதல்ல காபி உபசாரம் தான்!

“ராதா....நிமிஷமா காபி கொஞ்சம் கலந்து தரேனே?”

அம்மா........ப்ளீஸ் காபி வேணுமான்னு மட்டும் கேக்காதே!  இன்னிக்கு ஏற்கனவே நிறைய குடிச்சாச்சுமா


காபியை ஆத்தி ஆத்தி சமையல் ரூமிலிருந்து நான் இருக்கற இடத்துக்கு கொண்டு வந்து தருவா. ஏம்மா இப்படி நடக்கறே

இது என்னடி நடை?  திரும்பினா ஹால்,  மேல ஒரு அடி வச்சா இதோ ரூம்

நமக்கெல்லாம் காபி குடிச்சாதான் தெம்புன்னா, அவளுக்கு காபி கலந்தாதான் தெம்பே!.  

அன்னிக்கு ஒருநாள் அம்மாவும்  நானும் கடைக்கு போயிட்டு வந்தோம்.

அம்மா..10 நிமிஷம் படுத்துக்கறேன். லேசா தலை வலிம்மா  படுத்தேன்

காபி தரட்டுமா?  இதப்பாரு...தலைவலின்னா ஒருவா காபி குடிச்சா பட்னு விட்டுடும் தலைவலி. என்ன டயட் கியட் ஏதாவது இருக்கியா?   காபி குடிக்கறதையே நிறுத்திட்டயா என்ன?  (  யாராவது அப்படி காபியை ஒரேதடியா நிறுத்திட்டா அவளால அந்த ஷாக்கை தாங்கவே முடியாதோ!? )  அதுக்குன்னு காபியே குடிக்காட்டாலும் தலைவலி வரும்

ம்...சரி குடும்மா

இந்த அம்மாக்கு காபி கம்பெனியோட என்ன ஒப்பந்தமோ தெரியல?  ஒரு  நாளைக்கு எத்தனை காபி கொடுத்தா எவ்வளவு கமிஷனோ?  காபி வேணுமா?  ஒரு வா காபி.... இப்படி கேக்கறது. வேண்டாம்னாலும் கொடுத்தே விடறது. அலுக்கவே அலுக்காதா? செலவைப் பத்தியும் கவலை இல்லையா?

குட்டித்தூக்கம் போட்டு கண் முழிச்சேன். மணந்தது காபி. அம்மா படுக்கையின் பக்கத்தில் நின்று கொண்டு காபியை ஆத்திக் கொண்டிருந்தாள்.

இந்தா.. ஒரு வா குடி... தலை வலி இன்னும் இருக்கா?  மூஞ்சி சரியே இல்ல பாரு

காபியைக் குடித்தேன் .

நேரமாச்சுமா. வரட்டுமா  

இன்னொருவா தரட்டுமா?  இந்தா சாப்டுப்போ

ம்ஹூம்......  மண்டையை ஆட்டிவிட்டு கிளம்பினேன்.

தலைவலி விடவில்லை. ஆனால் அது என் நினைவில் இல்லை. அம்மாவின் காபியையே நினைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு வா... அது என்ன?  ஒரு வாயா? ஒரு தடவை கூட ஒரு வா காபி குடித்ததில்லை யாரும். அது ஒரு பேச்சுக்கு, உபசாரத்துக்கு சொல்வது. ‘கொஞ்சம்’,    ‘ஒரு வா’ இப்படியெல்லாம் சொன்னா சட்னு குடிக்க சம்மதிச்சுடுவாங்க..

இது எல்லாமே நேத்துதான் நடந்த மாதிரி இருக்கு. இன்னிக்கு தேதில அம்மா போய்ச்சேந்து முழுசா ஒரு வருஷம் முடிஞ்சாச்சு.

நானும் தலைவலி வந்தா காபி கலந்து குடிப்பேன். காபி நினைவு போயிடும் உடனே.. தலைவலி நினைவு பாடா படுத்தும்... ஏன்னா அது என் காபி. அம்மா காபி இல்ல.

அம்மா கடைசி நாலு வருஷம் அண்ணனுக்கு உடம்பு வந்ததுலேருந்து தானும் மனசு ரொம்ப தளர்ந்து போயிட்டா. அவனுக்கு ஏதோ மனசு சம்பந்தப்பட்ட வியாதி. அம்மா மனசையும் சேத்து வறுத்தது அவன் உடம்பு.

என் நினைவு தெரிஞ்சதுலிருந்தே என் அண்ணா ஒரு காபி ப்ரியன். இல்ல இல்ல ம்மா  காபி சாப்பிடறயான்னு கேட்டு கேட்டுதான் இப்படி காபி ப்ரியம் அவனுக்கு அதிகமாயிருக்கும்! அவனுக்கு உடம்புக்கு வந்தாலும் வந்தது, எப்பப்பாத்தாலும்  அம்மா காபி,  அம்மா காபி ன்னு நச்சரிப்பான். மருந்து சாப்பிடுவான். தூங்குவான். அம்மாவும் இத்தனை காபி குடிக்காதேடான்னு சொல்றதுமாட்டும் சொல்லுவாள்... ஆனா மனசு கேக்காம,  கலந்து கொண்டு போய் கொடுத்துட்டே இருப்பா. நடையா நடப்பா. சமையல் உள்ளுக்கும்..ஹாலுக்கும்,  அவன் ரூமுக்கும்...மறுபடி ஹாலுக்கும்...சமையல் உள்ளுக்கும்...ரூமுக்கும்...அதான் தெரியுமே!. அண்ணா கொறஞ்சது ஒரு நாளைக்கு 20 காபி குடிப்பான்...

அண்ணனுக்கு உடம்பு சரியே ஆகாததால அம்மாவுக்கு கடைசில காபி கொடுக்கறது கூட கொஞ்சம் அலுத்துப் போச்சு. அதாவது அண்ணாவுக்கு காபி கொடுக்கறது மட்டும் தான் அலுத்தது. அப்பகூட நானோ வேற யாராவது போணோம்னா ஒரு வா காபி சாப்பிடறயான்னு கேட்டு குடுக்காம இருக்க மாட்டா..

எத்தனையோ தடவை அம்மா எனக்கு காபி குடுத்திருக்கா.. என்ன ஒரு 23,000 தடவை எனக்காக மட்டுமே கலந்திருப்பாளா?.  அப்புறம் என் பாட்டி, தாத்தா, எங்கப்பாக்கு, அண்ணனுக்கு அப்புறம் வருவோர்,  போவோர்....எல்லாம் சேத்து மொத்தமா ஒரு 5 லட்சம் தடவை காபி கலந்திருப்பாளா?  மேலயே இருக்கும். கின்னஸ்ல வரலைங்கிற குறை ஒண்ணு தான். 


அம்மா கை காப்பி போட்டதை அவ போனப்பறம்தானே இத்தனை விமரிசையா நெனச்சுப் பாக்கறேன். தலை வலி வந்ததுனால தானே நெனச்சேன்?  அப்படிதான் இருக்கும்! வரட்டும் எனக்கு அடிக்கடி தலைவலி.

18 வயசுல சுறுசுறுன்னு காபி கலந்து ஓடி ஓடி கொடுத்திருப்பா. 25 வயசுல விறுவிறுன்னு நடந்து போய் காபி கொடுத்திருப்பா. 45 வயசுல  கால் வலி அதிகமாப் போய்  நடை தளர்ந்தும் காபி கலந்து கொடுத்திருக்கா. உடம்பு முடியாத கிழவியானப்பறமும் நடையாய் நடந்து காபி கொடுத்திருக்கா.

ஒவ்வொருவருக்கும் காபி கலக்கும்போது தானும் ஒருவா குடிப்பா. அதுதான் உண்மையில் ‘ஒரு வாய்’ - ‘ஒரு வா’..... அத்தனை பிடிக்குமோ எங்கம்மாவுக்கு காபி..?

என் அம்மாவின் அம்மா எத்தனை முறை என் அம்மாவுக்கு, என் அம்மா மாதிரி காபி உபசாரம் செய்திருப்பாள்?

இல்லை  என் அம்மாவின் பெண்  நான்தான், என் அம்மாவுக்கு...என் அம்மா மாதிரியே எத்தனை தடவை காபி உபசாரம் செய்திருப்பேன்?  இதுவரை நான் வாழ்ந்த என் மொத்த வாழ்க்கையில் ஒரு 10 தடவை?!   அவ்வளவுதான்.  இதுதான் நான்!  அதுதான் அம்மா!

முற்றும்
Geetha
தேவதை , அக்டோபர் 16-31, 2011

7 comments:

  1. அருகில் இருக்கும்போது அருமை தெரியாது ,
    கடந்த நாட்கள் திரும்ப வராது !!!

    ReplyDelete
  2. ஒரு வா காபி is really Suuuuppeeeerb!!!

    ReplyDelete
  3. Nice gk, this is bp....pls keep it up

    ReplyDelete
  4. "அம்மா காப்பி" -- ரொம்பவும் அர்த்தமுள்ள சொல்.
    அனுபவித்து எழுதியுள்ளீர்கள்..

    //ஒவ்வொருவருக்கும் காபி கலக்கும்போது தானும் ஒருவா குடிப்பா. அதுதான் உண்மையில் ‘ஒரு வாய்’ - ‘ஒரு வா’..... அத்தனை பிடிக்குமோ எங்கம்மாவுக்கு காபி..?..//

    மனசை என்னவோ செய்தது.

    ReplyDelete
  5. ARUMAI! ALAVILLA KAAPI ARUMAI, ALAVILLA AMMAVIN ANBU ARUMAI.ANDHA KAAPI INDRUM NINAIVIL IRUKKA KARANAM,OVVORU MURAIYUM AMMA KAAPI KALAKKUM POZHUDHUM DICACTION, PAAL SARKARIYUDAN SIRIDHALAVU ANBAIYUM THERIYAAMAL KALANDHITTAL.KAAPI VELIYAE SENDRADHU ANAL ANBU MANADHIL THEYNGIVITTADHU ADHUDHAAN UNMAI.
    S.S.GANESH

    ReplyDelete
  6. Liked alot. Very nice. Reminded me of my mother who used to come to the airport with the coffee in flask even in the midnight. No one substitue mother's place.

    ReplyDelete
  7. All the night I read your blog posts. No words to appreciate, I salute.

    ReplyDelete