Wednesday 24 August 2011

ஜிமிக்கி


சிறு கதை




எவ்வளவு முயற்சி செஞ்சாலும் தோல்வி!! அசாத்திய கவனக் குறைவு எனக்கு!

நான் தாங்க... வாசு... ஆபீஸிலிருந்து வீட்டுக்கு போய்க் கிட்டிருக்கேன்.  என் ஸ்கூட்டர்லதான்அப்பப்ப இப்படித்தான் நானே ஏதாவது புலம்புவேன்.  அட ஆபீஸைப் பத்தி இல்லீங்க!

இன்னியோட எனக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் முடிஞ்சாச்சுங்க! என்னைப் பொருத்தவரை இன்னிக்கும் நேத்திக்கு மாதிரி இன்னொரு நாள். அவ்வளவு தான்.

ஆனா அப்படி இருக்க முடியுமா? உலகத்தோட ஒத்து வாழணுமில்லையா? அதான் மனைவி மெச்சற மாதிரி இருக்குமா பரிசுன்னு ஒரே யோசனைங்க!!

புடவை,  நகையெல்லாம் சரிப்படாது.  ஏன்னா இதெல்லாம் முன்ன பின்ன கடைக்குப் போய் வாங்கி பழக்கம் இருந்தாதானே?  இல்ல புடவைகளில் இருக்கற வகைகளைப் பத்தியாவது தெரிஞ்சாதானே?   சரி வேற யாரையாவது விட்டு வாங்கலாம்னா எப்படித்தான் முடியுமோ அவளால? யாரு வாங்கினது? எந்தக் கடைன்னு மொதக்கொண்டு சரியா கண்டு பிடிச்சுடுவா!

என் கவனக் குறைவை நெனச்சா எனக்கே சிரிப்பு வரும். ( சமயத்துல அழுகையும் வரும் ) இன்னிக்கி காத்தால நடந்த ஜிமிக்கி விஷயத்தைப் பத்தி கடைசியா சொல்றேங்க.

அதுக்கு முன்னால வேற ரெண்டு விஷயம் பத்தி சொல்றேன்.

அன்னிக்கி ஒரு நாள் சாயங்காலம் என்னாச்சுன்னா.....

எங்க ஆபீஸ் சம்பந்தமா ஒரு பார்ட்டி. 5 நட்ஷத்திர ஹோட்டலில்.  என் பாஸ் தவிர வேறு பல வி.ஐ.பிக்களும் கலந்துப்பாங்க.  நானும், என் மனைவியும் கிளம்பறோம், அப்பத்தான் அவ கட்டியிருந்த புடவையை கவனிச்சேன். ( என் ஆபீஸ் பார்ட்டியாச்சே!)

சாணி நிறத்தில் மிக மங்கலாக இருந்தது.  அது 20 வருஷ பழைய புடவை. நான் கேட்டேன் அவ கிட்ட ( சில வார்த்தைகளை மட்டும் மனைவி கிட்ட சட்டுனு விட்டுட கூடாதுன்னு எத்தனை முறை என் நண்பர்கள் அடிச்சுகிட்டாலும் எனக்கு புத்தி கிடையாது. )

‘இன்னிக்கின்னு பாத்துதான்  இந்த புடவையை கட்டிக்கணுமா?  எத்தனை முக்கியமான பார்ட்டி தெரியுமா?’ ன்னு கேட்டேன். ஒரே வரில ‘நான் வரல உங்க கூட’ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு உள்ளே போயிட்டா.  இந்த பார்ட்டிக்கு அவளும் வந்தாகணும்.

ஏற்கனவே லேட்டு.   இன்னும் லேட்டாகிட்டே இருந்தது.

பத்து வருஷ அனுபவஸ்தனா லட்ஷணமா சமாதானம் பண்ணினேன்.

எனக்கு நிறைய விஷயங்கள் அந்தப் புடவையப் பத்தி எடுத்துச் சொன்னா!!

கடகடன்னு சொன்னா! அழகா சொன்னா!  சும்மா படிங்க. பத்து பாயின்டுக்கு ஒரு பாயின்டு தாங்க கம்மி.

1.
இது கிரேப் ஸில்க் புடவை
2.
அவளே வாங்கிக் கொண்டது !
3.
புடவை விலை ரூ. 4000 ( அய்யோ !!!)
4.
வாங்கி 8 மாதம் தான் ஆகிறது !!
5.
இதுவரை...ஒரே முறை தான் உடுத்தப்பட்டுள்ளது !!
6.
மாலை வேளைகளில் போகும் விழாக்களுக்கு இப்படித்தான் லைட் கலரில் உடுத்தணும்.
7.
புடவை லைட் கலராவும், கழுத்துல முருங்கைக்காய் அகலத்துல கலரா ஒரு மணியும் போட்டா ரொம்ப நல்லா இருக்குமா அவளுக்கு (கழுத்தை அப்பதான் கவனிச்சேன்!)
8.
அடிச்சு சொன்னா ( வாயாலத்தான் )  ஒரு நாலு பேராவது புடவையைப் பத்தி பார்ட்டில கேப்பாங்கன்னா (அப்புறம் ராத்திரி, கேட்டவங்க அஞ்சு பேரோட பெயர்களைச் சொல்லி அவ நிரூபனமும் செஞ்சுட்டா. )
9.
ஷர்ட் செலெக்ஷன் பத்தியும் தெரியாது, புடவையைப் பத்தியும் ஒண்ணும் தெரியாது.  ( இது என்னைப் பத்தின அவளோட (சரியான) அபிப்ராயம் )

கிளம்பிப் போயிட்டோங்க அப்பறம். ஏன்னா அவளுக்கு தெரியும் வீட்டுல அன்னிக்கு சாயங்காலம் சமையல் கிடையாதுன்னு.

இன்னொரு நாள் என்னாச்சு தெரியுமா?  கிளிப் பச்சை நிறத்துல பள பளன்னு ஒரு புடவை கட்டியிருந்தா.

‘புது புடவையா?  என்ன இன்னிக்கு? என்ன விசேஷம்?’  நாந்தாங்க கேட்டேன்.

சட்டுன்னு என் குட்டிப் பொண்ணும் மனைவியும் சிரிப்பா சிரிச்சாங்க என்னைப் பாத்து.  இது வரைக்கும் 100 தடவை கட்டியிருப்பாளாம் அந்த சில்க் காட்டன் புடவையை. அப்படி ஒரு பழசாம். நான் ஏன் ஒரு தடவை கூட பாத்ததில்லை? பார்ட்டிக்கு அப்பறம் இது நடந்ததால எனக்கு கெடச்ச வசவு, நான் பழசை புதுசுன்னும்,  புதுசை பழசுன்னும் சொல்லுவேனாம்.

ஸ்கூட்டர்ல தான் போயிட்டிருக்கேன். சிக்னல்ல நிக்கறேன். இன்னும் பத்து நிமிஷத்துல வீடு வந்துடும்.

இன்னிக்கு மார்ச் ஒன்பதாம் தேதிங்க. எங்க கல்யாண நாள். என் பொண்ணு வரைஞ்சு கொடுத்த வாழ்த்து அட்டையும், மனைவி வாங்கின புது சட்டையும் என் ரூம் மேசைமேல் பார்த்த உடனே தான் அதுவும் ஞாபகம் வந்தது.

சட்டையை போட்டுகிட்டேன்.  நல்லா இருக்குன்னும் சொன்னேன்.

சாயங்காலம் கோவிலுக்கு போலாமான்னா.  ம்....சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டு டிபன் சாப்பிட ஒக்காந்தேன்.

அப்பதாங்க கவனிச்சேன். அன்னிக்கு கூடுதல் அழகா இருந்தா.  தலைக்கு குளிச்சு, அப்பறம் புதுசா ஒரு ஜிமிக்கி போட்டிருந்தா.  குட்டியா ஒண்ணு. ரொம்ப அழகா இருந்தது. அதாவது அந்த ஜிமிக்கி என் மனைவிக்கு அத்தனை பொருத்தமா இருந்துச்சு.  நெஜம்மா அழகா இருந்தா.  சொன்னேன் மனசுல பட்டதை அப்படியே.....
‘ஏய் அந்த ஜிமிக்கி ஒனக்கு ரொம்ப அழகா இருக்கு’.

‘அட புதுசா?’ ன்னும் கேட்டேன். பெருமை வேற எனக்கு!

(அழகுன்னு சொன்னா பத்தாதா? அதுக்கு காரணும் சொல்லி மறுபடியும் மாட்டிக்கணுமா? ) கடமைக்கு சொல்றோம்னு பாதி சமயம் கண்டு பிடிச்சுடராங்க ! உண்மையா சொன்னாலும் மாட்டிக்கறவன் நான் ஒருத்தனாத்தான் இருப்பேன்!

ஜிமிக்கி பத்தி எனக்கு புரிய வெச்சா. அவ முகம் கோவத்துல ஜிவு ஜிவுன்னு இருந்தது.

1. மூணு மாசமா அந்த ஜிமிக்கி அவ காதுலதான் இருக்காம். ( என் முகத்துல வழிஞ்சதை நல்ல வேளை நீங்க பாக்கலை)
2.
இன்னிக்குதான் கழட்டிட்டு, கல்யாணா நாளாச்சே புதுசா வேற தோடு மாத்திக்கலாம்னு நெனச்சாளாம்.
3. 50
வருஷப் பழசாம்,
4.
அது அவள் பாட்டீதாம்.
5. மூணு மாசமா நான் ஒண்ணும் சொல்லாம,  கல்யாண நாள் அன்னிக்கு பேருக்கு புகழ்ந்துட்டேன்னு அவ நெனைக்கறா. (கோவம் ஞாயம் தானே?)
க்ளைமாக்ஸுக்கு வருவோம்.....

சரி ஒரு வழியா என்ன பரிசுன்னு நண்பர்கள் உதவியோட முடிவெடுத்தேங்க. நாள் பூரா இதே வேலை தான் ஆபீஸ்ல. ( நேரம் வேஸ்டே இல்லை. ஏன்னா இந்த அனுபவம் வாழ்க்கைல அவங்களுக்கும் உதவியா இருக்கும் ! )

என் மனைவிக்கும் தகவல் சொல்லிட்டேன். பதில் ஏதும் வரலே.

சாயங்கால காட்சி.  த்ரீ இடியட்ஸ் சினிமா. நாங்க ரெண்டு பேர் மட்டும். அவ அந்தப் படம் இன்னும் பாக்கல. கல்யாணாம் ஆன புதுசல சேந்து சினிமா போனதுதான். அதனால் இந்தப் பரிசை பிடிச்சுடும்னு நெனைக்கறேன்.

இதோ நான் ஒரு மணி நேரம் முன்னாலயே பெர்மிஷன்ல கெளம்பி போறேன்.  தயாரா இருப்பாளா?  

வீடு வந்தாச்சு.....

அட குழந்தைக்கு ஏதோ ஏற்பாடு பண்ணிட்டு வீடப் பூட்டி வாசல்லேயே நிக்கறா! எனக்கு காபி கூட கிடையாதா? அவ கட்டியிருந்த புடவை, அய்யோ வேணாங்க. அது எதோ ஒண்ணு இப்ப எதுக்கு அது ?

அவள் வாய் முழுக்க சிரிப்புங்க. அட எனக்கும் அவளை மாதிரியே புரியுதுங்க அதுவும் பாயின்ட் பாயின்டா.

1.
அட அவ சந்தோஷம் ஒரு சினிமா தானா?
2.
நான் கூட போணும் அவ்வளவு தானா?
3.
என் ஆவலை தெரியப்படுத்தற மாதிரி நானே டிக்கெட் வாங்கணும் !
4.
அவளுக்கு எந்த முக்யமான வேலையும் இல்லாத நேரத்தை தெரிஞ்சுக்கணும்.
5. அப்ப அதை அவ எதிர் பார்க்காமலும் செய்யணும் !
6.
அதுவும் பிறந்தநாள், கல்யாண நாள் அன்னிக்குன்னா ரெட்டிப்பு மகிழ்ச்சி.

நாங்க கிளம்பணுங்க.  என் புலம்பலை இத்தோட நிறுத்திக்கிறேன்.

சிரிச்சுகிட்டே, வண்டியை நிறுத்தச் சொல்லி கையை ஆட்டினா.

இதோ என் மனைவி வத்சலாவோட ஜிமிக்கியும் சேர்ந்து அழகாக சிரிக்கிறது.

வர்ரேங்க. 

முற்றும்.
Geetha
Published: Vikadakavi, 2018

10 comments:

  1. Wonderful story. You really have nice way of writing

    Charu

    ReplyDelete
  2. பத்து வருஷம் ஆகியும் உங்களுக்கு அனுபவம் பத்தலை...

    ReplyDelete
  3. Ennaku ore varusathula 10 varusa anupavam kidaicha mathiri irruku , nice

    ReplyDelete
  4. Amazing. You are going to go for a long way. All the best.

    ReplyDelete
  5. Romba nallaa irunkuthu. 10 nimishathula pengaloada manasa 0.1% puriya vachiteenga

    ReplyDelete
  6. EXCELLENT!COMEDY UDAN SAVUKKADI. PAZHATHIL OOSI YETRI PARTHIRUKKIRAIN AANAL IDHU PAZHATHAI OOSIYIL YETRUTHU. TIS SHOWS THE DON'T CARE ATTITUDE OF OUR PEOPLE.EVERYTHING STARTS AT HOME.
    VAAZHKAILAY SIRU SIRU VISHAYANGAL THHAAANUGA PERIYA SANDHOSHATHAI KODUKKUM.
    SSG

    ReplyDelete
  7. lovely.....jimikkiyoda, naaanum sirikkaren.

    ReplyDelete
  8. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  9. Wonderfully humourous....well imagined..close to real life....every reader can see himself/ herself in the story....congrats....keep it up...hari om

    ReplyDelete