Tuesday 6 December 2011

வலி கொடு



சிறு கதை
-------------------------------------------------

வலிக்குதும்மா


மருந்து சாப்டாச்சே கண்ணு.....இதோ இப்ப சரியாயிடும் பாரு


ம்...


தூங்கு...


ம்..ஹூம்....ரொம்ப வலிக்குதும்மா


சாமி விபூதி தடவறேன்.  வலி பட்னு காணாம போயிடும் சரியா? ”


இல்ல....தாங்க முடியல, வலிக்குது..


இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ.  சரியாயிடும்டா கண்ணு


உனக்கு இந்த மாதிரி வலிச்சா தெரியும்


சாமி...கடவுளே.....என் ராதா குட்டிக்கு எத்தனை மருந்து கொடுத்தும் வலி கொறையலயே. இந்த பிஞ்சை ஏன் இப்படி வதைக்கறே? அந்த வலி எல்லாத்தையும் எனக்கு கொடுப்பா.


அம்மா...நீ பெரியவ. ரொம்ப பெரிய வலியை உன்னால பொறுத்துக்க முடியும் இல்லமா?


ஆமாண்டி செல்லம். நிறைய தாங்கிக்க முடியும். அதான் சாமி... எனக்கு வலி குடுன்னு வேண்டிக்குவேன்.  இன்னும் பத்து நிமிஷந்தான். உன் தலையிலேருந்து வலி உஷ்ஷுன்னு பறந்து வந்து அம்மா தலைக்குள்ள ஒக்காந்துக்கும்.  பாக்கறியா?


ம்...


உன் அண்ணாவுக்கு இப்படிதான், திடீர்னு ஒரு நாள் தொப்பை வலி வந்து துடிச்சு போயிட்டான்.


இங்கயா.. பாரு?


ம்...அங்கதான். உன்னை மாதிரி ராமுவுக்கும் அப்ப சின்ன வயசு


8 வயசா?


ஆமாம்
 

ம்..சொல்லு


இதே மாதிரி தான். என் மடில படுத்துகிட்டு, அம்மா தொப்பை வலி தாங்க முடியலம்மான்னு அண்ணா கத்தினான்


அழுதானா?


ஒரே அழுகை


சாமியை வேண்டினியா?


“ஆமாம். ‘சாமி என் புள்ளையை இப்படி வலி கொடுத்து சோதிக்கறயே? அந்த வலியை எனக்குக் கொடுன்னு சத்தமா கேட்டு அழுதேன்


நீ அழுதியா?


ம்..


எனக்கும் அழுகை வராப்பல இருக்குமா


அழ வேணாம்.  கேளு. அண்ணாவை கூட்டிட்டு டாக்டர் கிட்ட போனோமா?


எனக்கு வலி இப்ப கொஞ்சந்தாம்மா இருக்கு. அப்பறம்?


டாக்டர், அண்ணாக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டார்


அய்யோ


ஒரு எறும்புக்கடி மயக்க ஊசியோட சரி.  உடனே ஆபரேஷன் முடிஞ்சு அண்ணா சிரிச்சுட்டே வெளிய வந்துட்டான்.  அவன் வலியும் ஓடிப்போச்சு


என்ன ஆபரேஷன்?


அபெண்டிசைட்டிஸ்?”


அபாண்ஸி..  ஸி...?”


என்ன சொன்ன ?


நீயே சொல்லுமா?


ம்..ஹூம்...திருப்பி சொன்னா நான் தப்பு பண்ணிடுவேன்


 “அம்மா...


என்ன?


தலவலி போயிடுச்சு, விளையாடப் போட்டா?


ம்...போ  

-----------------------------------------------------------------------------------------------------------


முப்பத்தஞ்சு வருஷம் முன்னால எனக்கு வயசு 8.


பெருமூச்சு....இது நான்தான்.   அம்மா இல்ல.


ஆமாம். அம்மா இப்ப இல்ல. இன்னியோட எங்கம்மாவோட காரியமெல்லாம் முடிஞ்சு முப்பது நாள் ஓடியாச்சு..


அப்பறம் வேறெப்பலாம்மா சாமிகிட்ட நீ வேண்டிகிட்ட?ன்னு அம்மாவை ஒரு தரம் விளையாட்டா கேட்டேன்.


திடீர்னு அப்பாவுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். அப்பாவுக்குதான் வலி தாங்காதே. கடவுளே அவர் வலியை எனக்கு கொடுத்துடுப்பான்னு கேட்டேன்.


அப்படியே வரிசையா மளமளன்னு சொல்லிக் கொண்டு போனாள்....


அப்பா  அண்ணாவை அடிச்சபோது, அண்ணாவுக்கு வலிச்ச வலிக்கு...


அண்ணியோட பிரசவ வலிக்கு...


பாட்டியோட பல்வலிக்கு.....


மாமாவோட மார் வலிக்கு...


பேத்தி மடால்னு கட்டில்லேருந்து கீழ விழுந்த வலிக்கு......


பேரன் மூக்கு மேல, பக்கத்து வீட்டு பையன் ஓங்கி குத்தின வலிக்கு....


இது எல்லாத்துக்கும், கடவுளே..வலி கொடு..வலியை எனக்கு மட்டும் 
கொடுனு அசட்டு அம்மா பொசுக்கு பொசுக்குனு யோசிக்காம சாமியை வேண்டியிருப்பா.


கேட்டால் கொடுக்காமல் போக அந்த ஆண்டவன் இல்லாமல் இருந்தால் தானே? 


கொடுப்பான். 


கொடுத்தான். 


அம்மாவின் கடைசி பத்து வருடங்கள் மனவலியுடன், கூடுதலாக கால் வலியையும் சேர்த்து கொடுத்தான். அப்பறம் இங்கும் அங்குமா ஒடம்புல சின்னதும் பெரிசுமா இன்னும் நிறையவே வலிகள். ஆகமொத்தம் வலிக்கு கொறச்சலே இல்லை. வேற என்னத்த அவ வரமா கேட்டா? வலியைத் தவிர?


கடைசி 30 நாள் படுத்த படுக்கையாய் இருந்தபோதும் வலி.


கடைசி இரண்டு நாட்கள் அரை மயக்கத்தில், இரண்டு கால்களிலும் வலியின் உச்சம்.  பாதத்தில் ஆரம்பித்த வலி, சிறுகச்சிறுக முட்டிவரை ஏறி, 24 மணி நேரத்துக்குள் அதன் உரிய அடையாளங்களுடன் (நரம்புகள் புடைத்து, செக்கச்செவேலென) தொடை வரை ஏறிவிட்டது.  அவள் இது வரை வாழ்நாளில் கண்டிராத வலி அது. 


உயிர் போற வலி...


உயிர் போறதுக்கு முன்னாடி வர்ற வலி...


மருந்து சரியில்லையா? மருத்துவர் சரியில்லையா? ஆஸ்பத்திரி சரியில்லையா? இல்லை பெத்த பசங்களா?


எது எப்படியோ?


ஒன்று மட்டும் உண்மை.  ஒன்று மட்டும் சரி. அது அவள் அப்போது அனுபவித்த அந்த வலி.


ஆண்டவன் இருக்கிறான்.


அம்மாவின் வாழ்க்கையில் இதுவரை சொல்லியும், சொல்லாமலும் ஆயிரம் வலிகள் இருந்திருக்கும். அதெல்லாம் எனக்கு தெரியாமலில்லை. ஆனால் அம்மா போனதுக்கப்பறம் முதலில் நினைவுக்கு வருவது....அம்மா கடைசியா பேசினது, கடைசியா தூங்கினது, கடைசியா சிரித்தது, கடைசியா கேட்டது, கடைசியா வலித்தது இதெல்லாம்தான். ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் மாதிரியே, லாஸ்ட் இம்ப்ரெஷனும் மனதில் பதிந்து விடுகிறது.


இதோ அம்மாவின் கடைசி 12 மணி நேரங்கள்...அப்படியே என் நினைவிலிருந்து....


ஆஸ்பத்திரி நிசப்தம், மணி சரியா இரவு 1.31....


ராதா


“என்னம்மா?


“ராதா...ராதா....வலி..


என் செல்ல அம்மா இல்ல, சரியாயிடும்


கால்... கால் வலி.


இந்த காலாம்மா?


ரெண்டு காலும்


மருந்து இப்ப சாப்டியே. சரியாயிடும் பார்


ராதா....ராதா...வலி...வலி..


என் கண்ணு இல்ல..ராமா ராமான்னு சொல்லுமா...வலி போயிடும்...யோகிராம் சுரத்குமார்னு சொல்லுமா


அதே அரை மயக்கந்தான்.


ராம்...ராம்....யோகிராம்  சுரத்குமார்....ராம்...ராம்...யோகிராம் சுரத்....யோகிராம்.....ராம்...ராம்...ராதா... 


நீ கேட்டதை கேட்டபோது கொடுக்காம நாள் குறித்து கொடுக்கிறான். அதுவும் நாள்கணக்கா கொடுக்கிறான்.


ஆண்டவன் இருக்கிறான்.....


ராதா....ராதா...வலி..


இப்ப கொறஞ்சுடும் பாரு


வலிக்குது


யோகிராம் சொல்லுமா


குழந்தை மாதிரி சொன்னாள்.  யோகிராம்......ராம்...ராம்....


அதே ஆஸ்பத்திரி நிசப்தம்,  காலை மணி 3.00


ராதா ராதா....வலி....வலி


“ராம்...ராம்...ராம் சொல்லு


ராம்.....ராம்....ராம்......ராம்...........ராதா........ராதா........ராம்.....ராம்.........ராதா.....ராம்.........ராதா..........ராம்............ராதா........ராம்  அவள் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருக்கு. என் கண்ணிலும் தான். அந்த நேரத்துல அது ஒண்ணுதான் என்னால முடிஞ்சது.


ராதா....ராதா...


மறுநாள் காலை 6 மணிக்கு அம்மா ஐ.சி.யூவுக்குப் போனப்பறம், ராமா... ராதாஎதுவும் எனக்கு கேக்கல.  அவ கூடதான் சாமி இருக்காரே!!  வலியை ஊசி ஊசியா அவர்தானே ஏத்தறார்!.


பகல் மணி 11.00. அவளின் அதிகபட்ச வலி.  கடவுளே...இன்னும் ஐ.சி.யூக்குள்ளதான் இருக்கியா?


மதியம் மணி 1.00.  வலியின் உச்ச கட்டம்.   ஐ.சி.யூ குலுங்கியது.


ஆண்டவன் இருக்கிறான்...


மணி 1.20.....ஒரு வழியாக வலி குறைந்துவிட்டதை டாக்டர் எங்களுக்கு சொன்னதைத் தொடர்ந்து,  சாமியும் விடை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். உறவுகள் எல்லாத்துக்கும் நாங்கள்  ‘அம்மாவுக்கு வலி விட்டதை சொல்லி அனுப்பிவிட்டோம்.


மதியம் மணி 1.31.... அம்மா வலி முற்றும் அடக்கம்.  கூடவே எனது அழுகையும் அடக்கம்.

***********************
Geetha
Published : Gokulam Kadhir , January, 2012.                                                

14 comments:

  1. கணவன், குழந்தைகள் மட்டுமல்லாது தன்னைச் சுற்றியுள்ள அத்தனை மனிதர்களின் வலியையும் வரமாக வாங்கிக் கொண்டவளின் கடைசி நாட்கள் இத்தனைத் துயர் தருபவையாக இருந்திருக்கவேண்டாம். பாவம், இத்தனைப் பேரின் வலியை வாங்கிக் கொண்டாளே... அத்தனைப் பேரில் ஒருவரேனும் அவள் வலியை வாங்க முயலவில்லையே.... ஒருத்தர் வேண்டாம், அத்தனைப் பேருக்கும் பகிர்ந்துகொடுத்திருந்தாலும் வலி மாயமாய்ப் போயிருக்குமே என்று என்னென்னவோ எண்ணத்தோன்றுகிறது. பரிதாபத்துக்குரிய தாயவள்! தாய்மையின் மொத்த உருவமும் அவளே... கதைக்கருவும் அதை எழுதியவிதமும் கதையோடு ஒன்றவைத்து நம் வீட்டில் நிகழ்வதைப் போன்ற ஒரு உணர்வை அளித்து வாட்டமுறச் செய்கின்றன. இதுபோன்ற தாய்மையைப் போற்றும் கதைகள் வழங்குவதற்காகவே உங்களைப் பெரிதும் பாராட்டுகிறேன் காமாக்ஷி. மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து இன்னும் நிறைய எழுதுங்கள்.

    சிறிய ஆலோசனை: கடைசியில் இருக்கும் வார்த்தை சரிபார்ப்பை நீக்கிவிட்டால் பின்னூட்டமிட விரும்புபவர்களுக்கு மிகவும் எளிதாய் இருக்கும்.

    ReplyDelete
  2. வலி கொடுக்கும் நிஜமான கதை..!

    ReplyDelete
  3. Tears well up on reading this!mother's truest self!

    ReplyDelete
  4. wali, nijamaana wali aanaal irundu waligalukkul enna vithyaasam?Confidence in self and others Amma uruvaakiyadhu aval siridhu mano vaidhyamum theyrindhu vaithirupaalo?Magalin munnaal kadavulidam thanakku andha valaiyai kodu ena kayttaal,mtravargalin wali magalin waliyai vida adhigam yenbhadahi unarthinaal ,magalin wali kuraidhadhu.Magal thayai pinpatravillai aval kadavulidam thayai venda sonnaal, aanal thaai pol magal kadvulidam vayndavillai,kadavul andha waliyai thankku koduthu vittaalo yendra bayam polum.Probably the daughter wanted that to do for her daughter and cannot afford to ask god to give her strength of both her Mother and daughter.........!!!!!!!!!!
    SSG

    ReplyDelete
  5. பிறக்கும் முன்னரே என்னை கருவில் சுமக்கும் வலி பெற்று, என் உதைப்பின் வலியை மகிழ்வுடன் ஏற்று, பிரசவ வலி தாங்கி என்னை உலகில் தருவித்து, பின்னர் தெரிந்தும், தெரியாமலும் நான் தந்த பல வலிகளையும் தயங்காமல் தாங்கிய என் இனிய தாய்க்கு, நான் செய்த பிரதிஉபகாரம், "என்னால முடியலடா..." என்று என்னிடம் ஏக்கமாக ஆஸ்பத்திரியில் சொல்லிய போதும், "இத மட்டும் பொறுத்துக்கோம்மா..." என்று இன்னொரு பாட்டில் செலைனையும் அவள் மணிக்கட்டில் குத்தி வலி ஏற்படுத்தியது... அவள் நினைவிழந்த பின்னும் மறுபடியும் கண் திறக்க மாட்டாளா, "வலிக்கரதுடா..." என்றாவது சொல்ல மாட்டாளா என ஏங்கி, மேலும் மேலும் ஊசிகளால் குத்தி, அவள் உடலை ரணமாக்கி... "ரொம்ப வலிக்கிறதா... ப்ளீஸ் சொல்லும்மா..." என்று அப்போதும் அவளுக்கு வலி ஒன்றையே கொடுத்தேனே...

    ReplyDelete
  6. ரவி கிருஷ்ணன் அவர்களுக்கு

    தாங்கள் நான் எழுதிய வலி கொடு கதையை படித்து உணர்ந்தமைக்கு நன்றிகள்.

    நான் எழுதிய கதை என் கண்ணில் நீர் வரவழைத்தது உண்மை. தங்களின் 5 வரிகளும் என் கண்களை குளமாக்கியதும் உண்மை.

    அம்மா Series Story 1 & 2 படிக்கவும்.

    ReplyDelete
  7. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete
  8. truly emotional

    i was not able to make a comment for some time.

    still in the same mood.

    all the very best. keep writing

    god bless
    venki

    ReplyDelete
  9. Geetha,
    Very touching.....do write something light and humorous, such stories while very very real are too sad to read....ha ha....
    beautifully written , well thought out...I like the fact that you ended that "azhugayum adakkam" - that is most essential, however great the grief, we have to st one point dust it and move on....thats what our Parents too will want us to do.

    ReplyDelete
  10. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html

    ReplyDelete
  11. awesome story, very touching...

    ReplyDelete
  12. Tears swelled up as I read.....being a mother can undstd the character very well.....well narrated....hari om

    ReplyDelete
  13. Tears swelled up as I read.....being a mother can undstd the character very well.....well narrated....hari om

    ReplyDelete
  14. Tears swelled up as I read.....being a mother can undstd the character very well.....well narrated....hari om

    ReplyDelete