சிறு கதை
-------------------------------------------------
“வலிக்குதும்மா”
“மருந்து சாப்டாச்சே கண்ணு.....இதோ இப்ப சரியாயிடும் பாரு”
“ம்...”
“தூங்கு...”
“ம்..ஹூம்....ரொம்ப வலிக்குதும்மா”
“சாமி விபூதி தடவறேன். வலி பட்னு காணாம போயிடும் சரியா? ”
“இல்ல....தாங்க முடியல, வலிக்குது..”
“இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ. சரியாயிடும்டா கண்ணு”
“உனக்கு இந்த மாதிரி வலிச்சா தெரியும்”
“சாமி...கடவுளே.....என் ராதா குட்டிக்கு எத்தனை மருந்து கொடுத்தும் வலி கொறையலயே. இந்த பிஞ்சை ஏன் இப்படி வதைக்கறே? அந்த வலி எல்லாத்தையும் எனக்கு கொடுப்பா.”
“அம்மா...நீ பெரியவ. ரொம்ப பெரிய வலியை உன்னால பொறுத்துக்க முடியும் இல்லமா?”
“ஆமாண்டி செல்லம். நிறைய தாங்கிக்க முடியும். அதான் ‘சாமி... எனக்கு வலி குடு’ன்னு வேண்டிக்குவேன். இன்னும் பத்து நிமிஷந்தான். உன் தலையிலேருந்து வலி உஷ்ஷுன்னு பறந்து வந்து அம்மா தலைக்குள்ள ஒக்காந்துக்கும். பாக்கறியா?”
“ ம்...”
“உன் அண்ணாவுக்கு இப்படிதான், திடீர்னு ஒரு நாள் தொப்பை வலி வந்து துடிச்சு போயிட்டான்.”
“இங்கயா.. பாரு?”
“ம்...அங்கதான். உன்னை மாதிரி ராமுவுக்கும் அப்ப சின்ன வயசு”
“8 வயசா?”
“ஆமாம்”
“ம்..சொல்லு”
“இதே மாதிரி தான். என் மடில படுத்துகிட்டு, அம்மா தொப்பை வலி தாங்க முடியலம்மான்னு அண்ணா கத்தினான்”
“அழுதானா?”
“ஒரே அழுகை”
“சாமியை வேண்டினியா?”
“ஆமாம். ‘சாமி என் புள்ளையை இப்படி வலி கொடுத்து சோதிக்கறயே? அந்த வலியை எனக்குக் கொடு’ன்னு சத்தமா கேட்டு அழுதேன்”
“நீ அழுதியா?”
“ம்..”
“எனக்கும் அழுகை வராப்பல இருக்குமா”
“அழ வேணாம். கேளு. அண்ணாவை கூட்டிட்டு டாக்டர் கிட்ட போனோமா?”
“எனக்கு வலி இப்ப கொஞ்சந்தாம்மா இருக்கு. அப்பறம்?”
“டாக்டர், அண்ணாக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டார்”
“அய்யோ”
“ஒரு எறும்புக்கடி மயக்க ஊசியோட சரி. உடனே ஆபரேஷன் முடிஞ்சு அண்ணா சிரிச்சுட்டே வெளிய வந்துட்டான். அவன் வலியும் ஓடிப்போச்சு”
“என்ன ஆபரேஷன்?”
“அபெண்டிசைட்டிஸ்?”
“அபாண்ஸி.. ஸி...?”
“என்ன சொன்ன ?”
“நீயே சொல்லுமா?”
“ம்..ஹூம்...திருப்பி சொன்னா நான் தப்பு பண்ணிடுவேன்”
“அம்மா...”
“என்ன?”
“தலவலி போயிடுச்சு, விளையாடப் போட்டா?”
“ம்...போ”
-----------------------------------------------------------------------------------------------------------
முப்பத்தஞ்சு வருஷம் முன்னால எனக்கு வயசு 8.
பெருமூச்சு....இது நான்தான். அம்மா இல்ல.
ஆமாம். அம்மா இப்ப இல்ல. இன்னியோட எங்கம்மாவோட காரியமெல்லாம் முடிஞ்சு முப்பது நாள் ஓடியாச்சு..
“அப்பறம் வேறெப்பலாம்மா சாமிகிட்ட நீ வேண்டிகிட்ட?”ன்னு அம்மாவை ஒரு தரம் விளையாட்டா கேட்டேன்.
“திடீர்னு அப்பாவுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். அப்பாவுக்குதான் வலி தாங்காதே. ‘கடவுளே அவர் வலியை எனக்கு கொடுத்துடுப்பா’ன்னு கேட்டேன்.”
அப்படியே வரிசையா மளமளன்னு சொல்லிக் கொண்டு போனாள்....
அப்பா அண்ணாவை அடிச்சபோது, அண்ணாவுக்கு வலிச்ச வலிக்கு...
அண்ணியோட பிரசவ வலிக்கு...
பாட்டியோட பல்வலிக்கு.....
மாமாவோட மார் வலிக்கு...
பேத்தி மடால்னு கட்டில்லேருந்து கீழ விழுந்த வலிக்கு......
பேரன் மூக்கு மேல, பக்கத்து வீட்டு பையன் ஓங்கி குத்தின வலிக்கு....
இது எல்லாத்துக்கும், ‘கடவுளே..வலி கொடு..வலியை எனக்கு மட்டும்
கொடு’ னு அசட்டு அம்மா பொசுக்கு பொசுக்குனு யோசிக்காம சாமியை வேண்டியிருப்பா.
கேட்டால் கொடுக்காமல் போக அந்த ஆண்டவன் இல்லாமல் இருந்தால் தானே?
கொடுப்பான்.
கொடுத்தான்.
அம்மாவின் கடைசி பத்து வருடங்கள் மனவலியுடன், கூடுதலாக கால் வலியையும் சேர்த்து கொடுத்தான். அப்பறம் இங்கும் அங்குமா ஒடம்புல சின்னதும் பெரிசுமா இன்னும் நிறையவே வலிகள். ஆகமொத்தம் வலிக்கு கொறச்சலே இல்லை. வேற என்னத்த அவ வரமா கேட்டா? வலியைத் தவிர?
கடைசி 30 நாள் படுத்த படுக்கையாய் இருந்தபோதும் வலி.
கடைசி இரண்டு நாட்கள் அரை மயக்கத்தில், இரண்டு கால்களிலும் வலியின் உச்சம். பாதத்தில் ஆரம்பித்த வலி, சிறுகச்சிறுக முட்டிவரை ஏறி, 24 மணி நேரத்துக்குள் அதன் உரிய அடையாளங்களுடன் (நரம்புகள் புடைத்து, செக்கச்செவேலென) தொடை வரை ஏறிவிட்டது. அவள் இது வரை வாழ்நாளில் கண்டிராத வலி அது.
உயிர் போற வலி...
உயிர் போறதுக்கு முன்னாடி வர்ற வலி...
மருந்து சரியில்லையா? மருத்துவர் சரியில்லையா? ஆஸ்பத்திரி சரியில்லையா? இல்லை பெத்த பசங்களா?
எது எப்படியோ?
ஒன்று மட்டும் உண்மை. ஒன்று மட்டும் சரி. அது அவள் அப்போது அனுபவித்த அந்த வலி.
ஆண்டவன் இருக்கிறான்.
அம்மாவின் வாழ்க்கையில் இதுவரை சொல்லியும், சொல்லாமலும் ஆயிரம் வலிகள் இருந்திருக்கும். அதெல்லாம் எனக்கு தெரியாமலில்லை. ஆனால் அம்மா போனதுக்கப்பறம் முதலில் நினைவுக்கு வருவது....அம்மா கடைசியா பேசினது, கடைசியா தூங்கினது, கடைசியா சிரித்தது, கடைசியா கேட்டது, கடைசியா வலித்தது இதெல்லாம்தான். ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் மாதிரியே, லாஸ்ட் இம்ப்ரெஷனும் மனதில் பதிந்து விடுகிறது.
இதோ அம்மாவின் கடைசி 12 மணி நேரங்கள்...அப்படியே என் நினைவிலிருந்து....
ஆஸ்பத்திரி நிசப்தம், மணி சரியா இரவு 1.31....
“ராதா”
“என்னம்மா?”
“ராதா...ராதா....வலி..”
“என் செல்ல அம்மா இல்ல, சரியாயிடும்”
“கால்... கால் வலி.”
“இந்த காலாம்மா?”
“ரெண்டு காலும்”
“மருந்து இப்ப சாப்டியே. சரியாயிடும் பார்”
“ராதா....ராதா...வலி...வலி..”
“என் கண்ணு இல்ல..ராமா ராமான்னு சொல்லுமா...வலி போயிடும்...யோகிராம் சுரத்குமார்னு சொல்லுமா”
அதே அரை மயக்கந்தான்.
“ராம்...ராம்....யோகிராம் சுரத்குமார்....ராம்...ராம்...யோகிராம் சுரத்....யோகிராம்.....ராம்...ராம்...ராதா...”
நீ கேட்டதை கேட்டபோது கொடுக்காம நாள் குறித்து கொடுக்கிறான். அதுவும் நாள்கணக்கா கொடுக்கிறான்.
ஆண்டவன் இருக்கிறான்.....
“ராதா....ராதா...வலி..”
“இப்ப கொறஞ்சுடும் பாரு”
“வலிக்குது”
“யோகிராம் சொல்லுமா”
குழந்தை மாதிரி சொன்னாள். “யோகிராம்......ராம்...ராம்....”
அதே ஆஸ்பத்திரி நிசப்தம், காலை மணி 3.00
“ராதா ராதா....வலி....வலி”
“ராம்...ராம்...ராம் சொல்லு”
“ராம்.....ராம்....ராம்......ராம்...........ராதா........ராதா........ராம்.....ராம்.........ராதா.....ராம்.........ராதா..........ராம்............ராதா........ராம்” அவள் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருக்கு. என் கண்ணிலும் தான். அந்த நேரத்துல அது ஒண்ணுதான் என்னால முடிஞ்சது.
”ராதா....ராதா...”
மறுநாள் காலை 6 மணிக்கு அம்மா ஐ.சி.யூவுக்குப் போனப்பறம், ராமா... ராதா…எதுவும் எனக்கு கேக்கல. அவ கூடதான் சாமி இருக்காரே!! வலியை ஊசி ஊசியா அவர்தானே ஏத்தறார்!.
பகல் மணி 11.00. அவளின் அதிகபட்ச வலி. கடவுளே...இன்னும் ஐ.சி.யூக்குள்ளதான் இருக்கியா?
மதியம் மணி 1.00. வலியின் உச்ச கட்டம். ஐ.சி.யூ குலுங்கியது.
ஆண்டவன் இருக்கிறான்...
மணி 1.20.....ஒரு வழியாக வலி குறைந்துவிட்டதை டாக்டர் எங்களுக்கு சொன்னதைத் தொடர்ந்து, சாமியும் விடை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். உறவுகள் எல்லாத்துக்கும் நாங்கள் ‘அம்மாவுக்கு வலி விட்டதை’ சொல்லி அனுப்பிவிட்டோம்.
மதியம் மணி 1.31.... அம்மா வலி முற்றும் அடக்கம். கூடவே எனது அழுகையும் அடக்கம்.
***********************
Geetha
Published : Gokulam Kadhir , January, 2012.